Pages

Saturday, January 26, 2013

ஷரிஆ சரியா?

நிமிர்ந்து நின்றால் கூரை இடிக்கும், கால் நீட்டி படுத்தால் சுவர்கள் நசுக்கும் குடிசையிலிருந்து வந்த ஏழை ரிசானா நபீக் சவூதி அரசினால் தலை அறுத்து கொலை செய்யப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.


ஷரிஆ சட்டம் சரியா? 

ஷரிஆ சட்டத்தில் "சிலை வைத்து வணங்குபவர்" களுக்கு (idolatry) மரண தண்டனை. (இதன்படி சகல இந்து பௌத்த கிறிஸ்தவர்களையும் மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.)

ஷரிஆ சட்டத்தில் தீவிரவாதத்துக்கு மரண தண்டனை. (ஒசாமா பின் லேடன், முல்லா முஹம்மது ஓமர் மற்றும் அவர் கூட்டத்தாரை தவிர..)

ஷரிஆ சட்டத்தில் கொலை செய்தால் மரண தண்டனை. (இடி அமீன் இறுதிவரை சவுதி அராபியாவில் வாழ்ந்து இயற்கையாக மரணித்தான்)

சாட்சிகள் இல்லாதவிடத்து குற்றம் நிரூபிக்கப்படமுடியாது என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார். தனது மனைவி ஆயிஷா வேறொருவருடன் தகாத உறவு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சாட்சிகள் இல்லை மற்றும் இறை வாக்கின் பெயரில் குற்றம் சாட்டியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.


ரிசானா கொலை வழக்கில் கொலை செய்ததை  (செய்திருந்தால் )  யாரும் பார்க்கவில்லை. சாட்சிகளும் இல்லை. அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ". ரிசானாவின் மொழிபெயர்ப்பாளி ஒரு மலையாளி. ஏன் அங்கே தமிழர்கள் இல்லையா?  அன்றையதினம் , ரிசானா  கோபமாக இருந்தாள் "  இது ஒன்றே அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட போதுமாய் இருந்தது.



இதையெல்லாம்  பார்க்கும் போது ஷரியா ஏழைகளையும் எளியவர்களையும் தண்டிப்பதற்காக (கடவுளை சாட்டி ) பணக்காரன் படைத்த சட்டம் என்றே தோன்றுகின்றது.


கடுமையான சட்டங்கள் இருப்பதாலேயே குற்றங்கள் குறைவாக காணப்படுகின்றது என்று நினைப்போர் தயவு செய்து இறுதியாக வந்த புள்ளி விபரங்களைப்பாருங்கள். சவூதி  அரேபியாவை விட எத்தனை நாடுகளில் கொலை குறைவாக காணப்படுகின்றது என்பதை. நோர்வே ஜப்பான் ஸ்வீடன் நாடுகளில் ஷரியா உண்டா?

குற்றம் செய்பவன் தன்னை "பதினான்கு வருடங்கள் சிறையில் தானே போடுவார்கள்.. தூக்கில் போட மாட்டார்கள்" என்று நினைத்து குற்றம் செய்வதில்லை . "நான் செய்வது யாருக்கும் தெரியாது" என்று நினைத்தே செய்கிறான்.

தண்டனைகள் தேவை தான். ஆனால் அவை குற்றத்துக்கு தகுந்த தண்டனைகளாக இருக்க வேண்டும். சிரச்சேதம் செய்வதை எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.

ஒரு சகோதரன் அவனது ஆக்கத்தில் எழுதியது கீழே

"1. ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார். 
2. அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார்."


அந்த கூலி என்ன ? உமது அன்னைக்கு அல்லது சொந்த சகோதரியை பலிகொடுத்துவிட்டு அவர் குற்றமற்றவாராயிருப்பின் அல்லா சிறந்த கூலி கொடுப்பான் என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?


காட்டுமிராண்டித்தனமான கண்மூடித்தனமான ஈவிரக்கமற்ற தண்டனைகளை வழங்கும் இரத்தக்காட்டேரி நாட்டுக்கும் அதை ஆதரிக்கும் மிருகங்களுக்கும், கடவுள் என்று ஒருவன் இருப்பானெனில் ....  அதுதான் இல்லையே.. பிறகு என்ன _____ ஐ எழுதுவது .

Saturday, August 13, 2011

சக்தி டிவி - கிழியும் முகமூடி...


shakthi Junior Super Star ( செல்லமாய் ஒரு குரல் தேடல்) - இலங்கையின் முன்னணி தொலைக்காட்சியான சக்தி ரிவியினால் குழந்தைச் செல்வங்களின் இசையறிவை வளர்ப்பதற்கும் அவர்களுடைய இசைத் திறமைக்கு மேடையமைத்துக் கொடுப்பதற்குமென வடிவமைக்கப்பட்ட ஓர் இசை நிகழ்ச்சி.

இந்தியாவின் Vijay TV ,d;  Airtel Super Singer Junior நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குப் பின் அதே சாயலில் ஏராளமான விளம்பரங்களுடன் இலங்கைச் சிறார்களின் மனதில் ஆசை விதையை விதைத்த ஓர் இசை நிகழ்ச்சி. ‘மெகா’ சீhpயல்களுக்கு அடுத்ததாக சக்தி ரிவியின் அதிகப்படியான நேயர்களைக் கொண்ட நிகழ்ச்சி இதுவென்றால் அது மிகையாகாது. இத்தகைய உன்னத நோக்கங்களைக் கொண்ட நிகழ்ச்சியில் சிறுவா;களுடன் சிபாரிசும் செல்வாக்கும் புகுந்து விளையாடுவதும் நடுவர்கள் நடிகர்களாவதும் வேதனைக்குhpய விடயமாகும்.

எதிர்பார்ப்புகளுடனும் கனத்த கனவுடனும் 3வது சுற்றுக்கு மேடையேறிய சிறார்களின் திறமைகள், திரைமறைவில் நிகழ்ந்த தில்லுமுல்லுகளால் மழுங்கடிக்கப்பட்டது மன்னிக்கபடமுடியாத குற்றமாகும். மிக நன்றாக பாடுவதாக 3 நடுவர்களாலும் நடுமேடையில் பாராட்டப்பட்ட சிறுவர்கள் சிலர் தவிர்க்கப்பட்டு, அதே 3 நடுவர்களாலும் பாட்டில் சுருதியே சேரவில்லை என்று குறைகூறப்பட்ட வேறு சில சிறுவர்கள் 4வது சுற்றுக்கு தொpவானது எவ்வாறு என்ற கேள்வி அனைத்து நியாயமான பெற்றோர்களின் மனதிலும் உருவானது. உடனுக்குடன் புள்ளிகள் தொpவிக்கப்படாததும், தொpவானவர்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாததும் கபட நாடகங்களுக்கான காலத்தைப் பெறுவதற்குதானோ என்ற ஜயமும் உண்டாகிறது. சில சிறுவர்களுக்கு மாத்திரம் அவர்கள் தொpவான விடயம் உடனடியாக (திரைமறைவில்)அறிவிக்கப்பட்டது எவ்வாறு?.

இதற்கெல்லாம் கிரீடம் வைத்தாற்போல் நடுவரொருவரை கேட்டபோது, அவர் ‘அங்கே எமது முடிவுகளுக்கு எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை’ என வேதனைப்பட்டு வெட்கித் தலை குனிந்தார். பாடல் தொpவின் போது, காதுக்கினிய சங்கீத பாடல்களை தொpவுசெய்யுங்கள் , கும்மாங்குத்து பாடல்களையும் துள்ளிசைப்பாடல்களையும் தவிருங்கள் என்று நடுவர்களால் கூறப்பட்டிருந்தது. ஆனால் போட்டி நிகழ்ச்சியின் போது இசையறிவைப் பாPட்சிக்கமுடியாத துள்ளல் இசையில் உருவான பாடல்களுக்கு உருகிவிட்டோம் என்று நடுவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது எவ்வாறு?

‘நாங்கள் குழந்தைகளின் மனதைப் புண்படுத்த மாட்டோம், அனைத்துக் குழந்தைகளின் பாடல்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவோம்’ என்று 1வது சுற்றில் மார்தட்டிக் கொண்ட சக்தி ரிவி, முதல் நாள் தொடக்கம் இறுதி நாள்வரை நிகழச்சிகளைப் பார்த்து இன்றாவது நாம் வரமாட்டோமா என ஏங்கிய பல குழந்தைகளின் மனஉளைச்சலையும் வேதனைகளையும் புரிந்து கொண்டிருக்கவில்லை.

இத்தனை தில்லு முல்லுகளுக்கு மத்தியில் அவர்கள் நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்திய விதம் அவர்களது நேயர்களை அலைக்களித்து வாசலில் பல மணிநேரம் காக்கவைத்தமை அவர்கள் நேயர்களுக்கு எந்தளவுக்கு கரிசனை காட்டுகிறார்கள் என்பதற்கு நல்ல எடுத்து காட்டு.2வது சுற்றுக்கு 8.30 மணிக்கு கலையகத்திற்கு வரும்படி கடிதம் அனுப்பிய சக்தி ரிவியினை நம்பி காலை 2.00 மணிக்கு மலையக தோட்டமொன்றில் இருந்து பல மைல்கள் நடந்து பின்னர் பலமணிநேரம் பேருந்தில் பயணம் செய்து 8.30 மணிக்கு கலையகத்தை அடைந்த ஓர் சிறுமி 11.00 மணிவரை சிறுநீர் கழிக்கவும், உட்காரவும் இடமின்றி வாயிற்கதவருகே காக்கவைக்கப்பட்டிருந்தது வருந்தி வேதனைப்படவேண்டிய விடயமாகும்.
பொறுப்பு வாய்ந்த சமூக கடமைகளைக் கொண்ட ஒரு வெகுசன ஊடகம் சிபாhpசுக்கும் செல்வாக்குக்கும் விலைபோய், பலத்த இழப்புக்களை சந்தித்த ஓர் சமூகத்தை மேலும் பல வருடங்கள் பின்தள்ள முயற்சிப்பது கொதிப்படையச் செய்கின்றது.

இவ்வாறாக இரட்டை வேடம் போடும் ஊடகங்களை மக்கள் வெறுத்து ஒதுக்கும் நாள் வெகு துhரத்தில் இல்லை என்பதில் ஜயமில்லை.

Saturday, August 6, 2011

விண்ணைக் கிழிக்கும் கீறல்கள்

"ஏய் எரும மாடு.. என்ட உயிர வாங்குறதுக்கு எண்டே வந்து பிறந்திருக்குது.. எத்தின தரம் உனக்கு நான் சொல்லிப்போட்டன்.. அந்த தண்ணிய எடுத்து விளையாடாத எண்டு .."

தேவி, போன வேகத்தில் தனது மூன்று வயதுக்குழந்தையின் முதுகில் ஒரு அடி வைத்தாள். குழந்தை அழவில்லை.. குழந்தையின் முகத்தில் அடி வாங்கியதற்கான எந்த ஒரு சாயலும் தென்படவில்லை.. குழந்தை தற்காலிக கொட்டிலின் வாயிலை நோக்கி நடந்தது. வாசலில் நின்று தனது  கைகளை தட்டி, ஒட்டியிருந்த ஈரமணலை அகற்றியது. வாசலில் நின்று தன்னை அடித்த அம்மாவின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்த அந்த பிஞ்சு மறுகணம் கொட்டிலினுள் ஓடி மறைந்தது.

தேவியின் மனதில் ஒரு வலி ... அவள் குழந்தைக்கு அடித்த அடி ஆயிரம் இடிகளாக மாறி அவளுடைய நெஞ்சில் இறங்கியது. துளிர்த்திருந்த கண்ணீரை துடைத்து விட்டு கொட்டிலினுள் நுழைந்தாள்.

தேவி.. முழுப்பெயர் தேவதர்ஷினி.. பெயருக்கேற்ற தோற்றம். வெயிலில் சுடுபட்டு கறுத்து இருந்தாலும் சாயல் பொருந்திய முகம். இருபத்து மூன்று வயதில் நாற்பது வயதுக்குரிய முதிர்ச்சி தெரிந்தது. பதினேழு வயதில கலியாணம்.. பதினெட்டு வயது தொடக்கம் இருபது வயது வரை வரிசையாக மூன்று குழந்தைகளை பெற்று எடுத்திருந்தாள். புருஷன் கடைசிச்சண்டயில தொலஞ்சு போனான்.. ரெண்டு வருசமா எல்லா "புனர்வாழ்வு"முகாம்களிலேயும், சிறைச்சாலைகளிலேயும் தேடியாச்சு.. செல் விழுந்து அப்பாவும் அண்ணாவும்  சொர்க்கத்துக்கு சுகமாக போய்விட்டார்கள். நரகத்துல இவளும் குழந்தைகளும், காலிழந்த அம்மாவும் அவதிப்பட கடவுள் வழிவகைகள் செய்திருந்தார்.

புதுக்குடியிருப்பில ஒரு அறை ஒரு விறாந்தையுடன் ஒரு கல்லு வீடு இருந்தது.. இப்ப இருக்காது எண்டு மட்டும் அவளுக்கு தெரியும். மீள்குடியேற்றத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை தந்த தற்காலிக "பேக்கரி" கூடாரத்தில கிளிநொச்சி புறநகர் பகுதியில வசிக்க வேண்டிய கட்டாயம். கடைசி அஞ்சு வருசமா மெலிஞ்சு நிறைகுறைஞ்சு வந்தவள் (இரும்புச்சத்து குறைவால... இரத்தச்சோகை இருந்ததாம்) யுத்த காலப்பகுதியில் ஒரே நாளில் ஒரு கிலோ கூடினாள். வெடிச்ச செல் பீசுகள் இன்னும் தொடையிலும் வயித்துப்பகுதியிலும் இருந்தன. (உடம்பில தேவைக்கதிகமாகவே இரும்பு வந்து சேர்ந்தது ).. எல்லா தாக்குத்தர்களும் இவ்வளவு காயம் பட்டு தப்பினதே பெரிய விஷயம் எண்டு கதச்சவ.. பீசுகள எடுக்க முடியாதாம்.. ஏதோ முக்கியமான நாடி நரம்புகள் பக்கத்தால போகுதாம். படுபாவிக்கடவுள்.. எனக்கு அதில எதாவது ஒண்டுல பட்டு சாவு வந்திருக்க கூடாதா? என்று நினைத்து மறுகணமே குழந்தைகளுக்காக உயிர் வாழவேணும் என்ற வெறி, கவலையும் வேதனையையும் மிஞ்சும்.

"இவனுக்கு நாலு நாளா காச்சல் நெருப்பா காயுது.. இண்டைக்காவது கொண்டு போய் காட்டு" செல்லம்மா முனகினாள். 

"ம்ம்..

ரெண்டாவது குழந்தைக்கு காய்ச்சல்.. இண்டைக்கு வேலையில இருந்து அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு வந்து பிள்ளைய இடாக்குத்தரிட்ட கொண்டு போயிரோணும்.
செல்லம்மாவை தூக்கிக்கொண்டு காட்டுப்பக்கம் போய் காலைக்கடன் கழிக்க விட்டாள். கையப்புடிச்சுக்கொண்டால் தான் அவவால குந்த முடியும். ஒரு கால் தானே இருக்கு. ஒரு பிளாஸ்டிக் கதிரில ஓட்டை போட்டு வச்சிருந்தவள். அதுவும் ரெண்டு மாசத்துக்கு முதல் உடைஞ்சு போயிற்று. ரோட்டோரமா பொறுக்கின கதிரைக்கு உத்தரவாதம் யாருட்ட கேட்கிறது.

"கெதியா போவன்.. வேலைக்கு நேரம் போயிற்று. அந்த மனுஷன் கத்தியே கொண்டு போட்டுருவான். இண்டைக்கு லீவு வேற கேட்கோணும்" தேவி அம்மாவை அவசரப்படுத்தினாள்.

"வந்தாத்தானே போகலாம்" செல்லம்மாவுக்கு மலச்சிக்கல் வேறு. பத்து நிமிடம் போராடிப் பார்த்தாள். ம்ம்ஹும் .. வரவில்லை.

"பிள்ளை!! என்னக்கொண்டுபோய்  படுக்க வை .. நாளைக்கு பாப்பம்"

மீண்டும் அம்மாவை தூக்கி கொண்டு போய் படுக்க வைத்தாள் .. 

"நான் மத்தியானம் வந்து கஞ்சு வடிச்சு தந்துட்டு இவன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறன்." 

டி சேர்ட்டையும் ஜீன்சையும் தூக்கி மாட்டினாள்.. "மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பிரிவு" என்று அதில் பொறிக்கப்பட்டு இருந்தது.

காலையில் தன்னிடம் அடி வாங்கிய குட்டிக்கண்மணிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு.. அவசர அவசரமாக ஓடினாள்.


****  ****  ****  ****

ஒரு நாள் முழுக்க வேலை செஞ்சால் முன்னூறு ரூபா. ஏதோ "அந்தக்காசு இந்தக்காசெல்லாம்" கழிச்சு இருநூற்று அறுபத்து மூன்று ரூபா வரும். கிழமையில அஞ்சு அல்லது ஆறு நாள்தான் வேலை. உயிர அடகு வச்சு செய்யிற வேல.. கண்ணி வெடி  வெடிச்சா பிள்ளைகள் எல்லாம் ரோட்டுல தான். வேலைக்கி போற எல்லாரையும் காலயில ஆறரைக்கு லாரி வந்து ஏற்றிப்போகும். அது பள்ளம் மேடு பாக்காத லாரி.. எல்லாத்துக்குள்ளயும் விழுந்து எழும்பி ஓடும். இடுப்பெலும்புகள் இரவில் இரக்கும் போதுதான் வேதனை தெரியும். போட்டிருக்கும் நீலச்சட்டை வேலைத்தளத்தை அடையும் போது செம்மண் கலரில் இருக்கும். சட்டை மட்டுமல்ல தலை முகம் எல்லாம்.. பழக்கப்பட்டுவிட்டது.. 

வேலை செய்யும் போது ஓய்வெடுக்க நேரமிருக்காது. ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டளவு பரப்பளவு ஒதுக்கப்பட்டு இருக்கும். அதை மேற்பார்வை செய்ய ஒரு மேற்பார்வையாளர். அவரிடம் தான் லீவு கேட்கவேண்டும். கடிதமொண்டும் எழுத வேண்டும். மெடிக்கல் சர்டிபிகட் இல்லையெண்டால் வேல வேற போயிரும்.


மகனின் நினைவு வந்தது.. காய்ச்சல்.. தொடந்து காச்சல் தான், மருந்தெடுக்க போனா ஒரு நாள் முழுக்க லைன் இல நிக்க வேணும். இதாக்குத்தர இரண்டு நிமிஷம் பார்க்க நாலு மணித்தியாலம் காக்க வேணும்.பிறகு மருந்தெடுக்க.. சில மருந்து இருக்காது.. வெளியில வாங்க வேணும்.. ஆஸ்பத்திரிக்கு போனா வேலைக்கு போக ஏலாது. வேலைக்கு போனாத்தான் கஞ்சு.. இல்லாட்டி பட்டினி தான். (அம்மா பசிக்குது பசிக்குது). இரத்தம் முழுக்க பாலாக்கி குழந்தைகளுக்கு கொடுத்தாகிற்று. மூண்டு பிள்ளைகளுக்கும் அவள் ஒருத்தியால் பால் கொடுக்க முடியுமா? எல்லாரும் பால மறக்க வை மறக்க வை எண்டு சொல்லுகினம். அப்ப பாலுக்கு பதிலா என்னத்த கொடுக்க? வேணுமே!!

இடம் வந்துட்டு.. இறங்குவம் 

****  ****  ****  ****


"ஐயா" 

"ஆ.. தேவி.. என்ன விஷயம். என்னோட கதைக்கவே மாட்டியே. இண்டைக்கு என்ன? "

தேவியின் கண்களை பார்த்து அவன் கதைக்கவில்லை. டி சேர்ட்டில் எழுதியிருந்த வாசகங்களை உன்னிப்பாக வாசிக்கிறான். தேவி குனிந்து கூனி நின்றாள். அவளுக்கு இந்த காமப்பிசாசை பற்றி ஏற்கனவே தெரியும். அதுவொன்றே இவனை அவள் தவிர்ப்பதற்கு போதுமாக இருந்தது.

"மகனுக்கு சுகமில்ல.. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகோணும். இண்டைக்கு மட்டும் அரை நாள் லீவு கொடுத்தீங்க எண்டா.."

"லீவே .. போன கிழமை பெரிசு என்ன சொன்னதெண்டு கேட்ட நீ தானே... லீவு எடுத்தா மெடிக்கல் சர்டிபிகட் கொண்டுவரணும். மகன் ட சர்டிபிகட் செல்லாது. உனக்கு மெடிக்கல் எடுக்கேலுமே? அப்ப போயிட்டு வரலாம்." அவனது கண்கள் இன்னும் அங்கேயே நின்றது.

"ஐயா போன கிழமை நம்மட சரோ அக்கா அரை நாள் லீவு எடுத்தவ. உங்கட்ட சொல்லிப்போட்டு தான் நின்டவ, மெடிக்கல் உம் குடுக்கயில்ல. நீங்க மனசு வச்சீங்க எண்டா.." குனிந்து கொண்டே கேட்டாள்.

"அது .. அது.. உன்னட்ட சொல்ல என்ன? உனக்கு தெரியும் தானே. சரோ நான் சொல்லுறத எல்லாம் கேட்கிறாள்..நீயும் கேட்டி எண்டா ... யோசிக்காலாம்!! லீவப்பற்றி..
அவளது கைகளை பற்றி தடவினான்..

அவளால் அதற்கு மேல் அங்கே நிற்கமுடியவில்லை. விருட்டென்று திரும்பி நடந்தாள்.

இந்த சண்டாளனைப்பற்றி பலர் புகார் கொடுத்தும் ஒண்டும் நடக்கவில்லை. புகார் கொடுத்தவர்கள் தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அவன் அப்பிடியே கல்லு மாதிரி நல்லா இருக்கான். அவன்ட அண்ணன் ஏதோ அரசியல் கட்சியிண்ட தலைவர் வீட்டுல கக்கூசு கழுவுறானாம்.

"ரெண்டாயிரம் ரூபா காசும் தாறன்" 
பின்னால் நின்று மீண்டும் கூப்பிட்டது அந்த பிசாசு.

"அவள் நிற்கவில்லை"

****  ****  ****  ****

நேரம் பத்துமணி..

புற்புதர் முதுகில் குத்தியது.. மேற்பார்வை செய்யும் மிருகம் நெஞ்சில் முட்டி ஏதோ செய்துகொண்டிருந்தது. தொழில் செய்யும் இடம் தொலைவில் இருந்தது. மிருகம் ஆறாத தாகத்த்தை தீர்க்க முயன்றுகொண்டிருந்தது.. 

நிமிர்த்து படுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தாள் தேவி. வானத்தில் மேகங்கள் குறைவாகவே இருந்தன.. அதிலே ஒரு விமானம் வானத்தில் கீறல் போட்டுக்கொண்டு போனது.. ஆனால் வானத்துக்கு இரத்தம் வரவில்லை.

"இந்தா பிடி ஆயிரம் இருக்கு.."

"ரெண்டாயிரம்..." என்று முனகினாள். தொண்டை அடைத்துக்கொண்டது. கேசவனின் ஞாபகம் வந்தது. எனக்கு துரோகம் செய்தாயே என்று அவனுடைய ஆன்மா கேட்பதுபோலே இருந்தது.

"அடுத்த தரம் பார்த்து தரலாம். பின்னேரம் வேலைக்கு வந்துரு."

அவன் குடுத்த நீல நிற ஆயிரம் ரூபாய் நோட்டில் ஒருவர்  கைகளை தூக்கியவண்ணம் அழகாக சிரித்துக்கொண்டிருந்தார்..

Monday, May 23, 2011

அழுக்கு

"பள்ளிக்கு போவதில்லையா? "

"இல்ல அண்ணா!"

"ஏண்டா? வீட்டுல கஷ்டமா?"

"ம்ம்ம்.. அப்பா வீட்டுக்கு பெரிசா காசு குடுக்கிறதில்ல.. நல்லா குடிப்பார்..."

"அம்மாக்கு அடிப்பாரா?"

"இல்ல இல்ல.. அம்மாதான் அடிப்பா. அவர் வெறியில மயங்கின பிறகு!!"

"அண்ணா அக்கா இருக்கா?"

"அக்கா மட்டும்.. ஆனா இப்ப இல்ல.."

"எங்கடா?"

"இயக்கத்துக்கு போனவ.. பிறகு காணல்ல."

"ஹ்ம்ம்.. வீடு எங்கடா தம்பி? "

"மாங்குளம் "

"பஸ்சிலையா இங்க வந்து போவாய்?"

"சைக்கிள்"

"என்ன சயிக்கிலா ?"

"ம்ம்.. அந்தா நிக்குது.. "
 
முறிகண்டிப் பிள்ளையார் கோயிலில் இருந்து மாங்குளத்துக்கு இருந்த இருபது கிலோமீட்டர் தூரத்தை எதோ இருபது மீட்டர் கணக்கில் அசால்ட்டாக சொல்லிக்கொண்டே இரண்டு டயரை ஒரு இரும்புத்துண்டில் பொருத்தியபடி சயிக்கிள் மாதிரி இருந்த ஒரு வாகனத்தை காட்டினான்.. அது கீழே படுத்து இளைப்பாறிக்கொண்டிருந்தது. ஸ்டாண்டு கூட இல்லை.




"எத்தின மணிக்கு வீட்ட போவாய்?"

"மூண்டு மணிக்கு.."

"அடேய் இப்பவே நாலு மணியாகிட்டுதே டா!!!"

"இது இண்டைக்கு.. நான் சொன்னது நாளைக்கு.. "

வடிவேல் மாதிரியே சொல்லிவிட்டு அவனுடைய சூத்தை பல் தெரியும்படி சிரித்தான்.

"அப்ப இரவைக்கு.. எங்கடா படுப்பாய்?"

"கோயில் வாசல்ல."


முறிகண்டி பிள்ளயாரிண்ட துணையுடன் படுத்துறங்கும் தைரியம் அவன் குரலில் தெரிந்தது.

"சரி சரி.. சாப்பிட்டியா?"

"ம்ம்ம் வடை சாப்பிட்டன்!"

"நேற்றா இண்டைக்கா?"

"இப்பதான்.. அது சரி ஏன் என்னப்போட்டு இப்படி கேள்வி கேட்கிறீங்க? பொலிசில கிளிசில புடிச்சி குடுக்க போறீங்களோ?"
 
சிறுசு விவரங்கள் தெரிந்து வைத்திருக்கிறது.

"ஏண்டா.. நீ களவு கிளவு எடுக்கல்லியே?"

"பள்ளிக்கு போகாட்டி போலிஸ் பிடிக்கும் எண்டு ஒரு மாமா சொன்னவர். சரி சரி நான் கச்சான்கொட்டை விக்க போக வேணும். என்ட காசத்தாங்க"

கச்சான் வாங்கினால்தான் கதைப்பேன் என்று அவன் என்னுடன் கதைக்க தொடங்கமுன்பே வரையறை விதித்திருந்தான். பாக்கேட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்துக்குடுத்தேன். நாலு பக்கெட் கச்சான் எண்ணித்தந்தான்.

"வேண்டாமடா.. நீயே வச்சுக்கொள் "

"இல்ல இல்ல நீங்க வாங்கிக்கொள்ளுங்க.. வித்து முடிச்சாத்தான் நான் வீட்ட போகலாம்"

அவன் சொல்வதற்கும் முறிகண்டி விநாயகரிடம் அருள் பெறப்போன எனது மனைவியும் 5 வயது வாண்டும் வெளியே வர சரியாய் இருந்தது. என்னிடம் ஓடி வந்த வாண்டு

" டாட் ஐ வான்ட் தட் பீ நட்ஸ்

கச்சான் பக்கெட்டை காட்டியபடி சிணுங்கினான்

சுசந்திக்கா வேகத்தில் ஓடிவந்த மனைவி. குழந்தையை தூக்கிக்கொண்டு

"நோ  நோ இட்ஸ் டர்ட்டி (Dirty)"

என்று சொல்லிவிட்டு வந்தவேகத்தில் வெயில் தாங்காமல் ஓடிச்சென்று காருக்குள் ஏறிவிட்டாள். அமரிக்காவில் பிறந்தவளில்லை. நம்மட திருகோணமலைதான்..

" சார்.."

காரைப்பார்துக்கொண்டு இருந்ததில் அவன் கூப்பிட்ட பக்கம் பார்க்கவில்லை.

"சார் "

"என்னடா? "

"நோ எண்டா இல்லைதானே ?"

"ம்ம்ம் "

"டர்ட்டி எண்டா  என்ன சார்?"

அவனை நோகடிக்காமல் இருக்கக்கூடிய சொற்களை மூளையில் சர்ச் செய்தேன்.

"டர்ட்டி .. எண்டால் ... நல்ல ருசியாக இருக்கும் எண்டு அர்த்தம்"

" அப்பிடியெண்டா இல்ல இல்ல  நல்ல ருசியாக இருக்கும் எண்டு அக்கா சொல்லிட்டு போகுது!!! ம்ம்ம்.. அதுசரி பையன் என்ன கேட்டான்? "

 நிச்சயமாக இந்த கேள்வியை நான் எதிர் பார்க்காவில்லை!

"ம்ம்ம் .. கச்சான் கசக்குமா எண்டு கேட்டான்.."

"அது சரி கச்சானுக்கு இங்கிலீசுல என்ன? "

இப்போது கேள்வி கேட்பது அவன் முறை. பிய்த்து உதறுகிறானே!!

"பீ நட்ஸ்"

முதன்முறையாக ஒரு உண்மை சொன்னேன்.

 கவலையாக இருந்தது. ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து அவனுடைய ஷர்ட் பாக்கெட்டில் திணித்தேன். அது  ஓட்டை வழியாக கீழே விழுந்தது. அவன் அதை  எடுத்து மடித்து மற்ற பாக்கெட்டுக்குள் வைத்தான்.

"இங்கால ஓட்டையில்ல!"

"உன்ட அம்மாவுக்கு நான் காசு குடுக்கோணும். இத குடுத்து விடு."

"சரி சார். இங்கால வந்தா இனி என்னட்டயே பீ நட்ஸ் வாங்குங்கோ "

ஏழு வயதில் எவ்வளவு முதிர்ச்சி. நம்மட மகன மூத்திரம் பேயக்கூட தனிய விடமாட்டமே? மனைவி அழைக்கவும் அவனிடம் பார்வையிலேயே விடை பெற்றுக்கொண்டு அவன் கொடுத்த நான்கு கச்சான் பாக்கேட்களுடனும்  காரில் ஏறினேன். ஜம்போ பீ நட்ஸ் மகனின் வாய்க்குள் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது. காரை ஸ்டார்ட் செய்தேன். அப்போது ஒரு UNICEF வாகனம் கோயிலுக்கு வந்து நின்றது. ஒரு வெள்ளைக்காரனும் வெள்ளைக்காரியும் உள்ளேயிருந்து இறங்கினார்கள். கச்சான் பையன் அவர்கள் அருகே ஓடிச்சென்றான்.

"சார் டர்ட்டி பீ நட்ஸ் .. நல்ல டர்ட்டி பீ நட்ஸ்..  வேணுமா ?"



Sunday, May 15, 2011

ஒரு பயணம் ..

" கோப்பி .. உனு உனு  கோப்பி...கோப்பி... கோப்பி "

கொட்டாவி விட்டபடி எழும்பினேன்.. பக்கத்தில் இருந்த ஐயா என்னைப்பார்த்து சிரித்தார். காலை வணக்கம் சொன்னார்..

"தம்பி நல்ல நித்திரை போல.."

நானும் நீண்ட நேரம் அசந்து தூங்கிவிட்டதை எண்ணி அசடு வழிந்தேன்.. சட்டையை சரி செய்து கொண்டேன். மணிக்கம்பி 7 ஐத் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது.

"எந்த ஸ்டேஷன் ஐயா?"

"கம்பஹா.. இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். எங்கட ஊரில எப்ப நேரத்துக்கு ட்ரெயின் போய்ச் சேந்திருக்கு.. நான் லண்டனில இருக்கேக்குள்ள டைம் எண்டா டைம் தான் ..."

அவருடைய கதையில் மேற்கொண்டு கவனம் செலுத்த முடியவில்லை; வானம் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. வெளிக்கிடும் போது அம்மா குடையை எடுத்துக்கொண்டு போகச்சொன்னது ஞாபகம் வந்தது.

"நாங்கெல்லாம் அம்மா சொன்னத எப்ப கேட்டிருக்கம்".

எதிரே இருந்த அஞ்சு வயசு வாண்டு யன்னலுக்கு வெளியே தலையைப் போடுவதிலேயே குறியாக இருந்தான். அவனுடைய அம்மா அவனுடைய இடுப்பிலே கை வைத்து உள்ளே இழுப்பதிலேயே குறியாக இருந்தாள். மனம் இன்றைய பயணத்தின் காரணம் பக்கம் போனது. இன்று தான் முதலாவது interview . நாலு வருஷம் campus ல படிச்சு நாப்பது எக்ஸாம் எழுதி இருப்பன். பின்னேரம் 2 மணிக்கு.. இன்னும் நேரம் கிடக்கு.

***


ஐயா அவருடைய பிரயாணப்பையை மேலே இருந்து எடுக்க கஷ்டப் பட்டார். நான் அவரது பையை எடுத்துக் கொடுத்தேன். இறங்க  முற்பட்ட வேளையில் ஒரு பொடியன் ஐயாவை இடித்து தள்ளிக்கொண்டு இறங்கிப்போனான். அவர்  தடுமாறி கீழே விழுந்துவிட்டார். தூக்கிவிட்டேன். ஐயா சிரித்துக்கொண்டே

"பாவம்! வயிறு சரியில்லை எண்டு நினைக்கிறன்!" என்றார்.

"எங்கட தமிழ்ச்சனம் தான் மோசம் தம்பி.. ஹ்ம்ம்.. என்ன செய்ய? எல்லாத்துக்கும் க்யு வில நிண்டு நிண்டு முண்டுப்பட்டு முட்டுப்பட்டு பழகிட்டுது. சங்கக் கடை.. கிளியரன்ஸ்.. பாஸ்.. கப்பல் டிக்கெட்... செக் பொயின்ட்"

ஐயா பகிடியாக சொன்னாலும் அதில் நிறைய கருத்து நிரம்பியிருந்தது..

"தம்பி கொழும்பில எந்த இடம்? நான் கொட்டாஞ்சேனை போகவேணும்

""நான் வெள்ளவத்தை ஐயா. நான் வாறன்"

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் சிற்சில மாற்றங்களுடன் நவீன மயப்படுத்தப் பட்டிருந்தது. பெரிய TV monitor கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தன. எனது பிரயாணப்பையை தூக்கிக்கொண்டு இறங்கினேன்.






அப்பப்பா.. ஜன சமுத்திரம் மெதுவாக வாயில் கதவை நோக்கி  நகர்ந்து கொண்டிருந்தது . என்னதான் மேம்பாலம் கட்டி வைத்திருந்தாலும் கீழே குதித்து தண்டவாளத்தை தாண்டி போகும் பழக்கம் இன்னும் நிறைய பேருக்கு இருந்தது. எனது டிக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டேன்.

அப்போது தான் "அவன்" என்னை நோக்கி வந்தான். பெரிய ஆபீசர் போலே உடையணிந்திருந்தான். அவனுடைய சப்பாத்து மினுமினுக்கும்படி போலிஷ் செய்யப்பட்டிருந்தது. அவனுடைய முகத்தில் பதட்டம் தென்பட்டது. அவன் முகத்தில் வியர்வை துளிர்த்திருந்தது.

" சேர்.. நான் ஒரு வேலை விஷயமா கொழும்புக்கு வந்தனான். என்ட purse ஐ யாரோ அடிச்சிட்டானுகள்."

அவன் பின் பக்கமாய் திரும்பி காட்டினான். அவனுடைய பின் பாக்கெட் அரைவாசி கிழிந்திருந்தது.

"எனக்கு இங்க யாரையுமே தெரியாது சேர்.  எனக்கு ஊருக்கு போக மட்டும் ஒரு 350 ரூபா காசு கொடுத்தீங்க எண்டா, நான் ஊருக்கு போய் உங்கட காச திருப்பி அனுப்பிவிடுறன் சேர்."

அவனுடைய முகத்தில் இம்மியளவும் பொய் சொல்கிறான் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அவன் எனது முகத்தை பார்க்க முடியாமல் குனிந்து கொண்டு நின்றான். 25 வயது இருக்கும். படித்தவன் போலிருந்தான். அம்மா சொன்னது மீண்டும் ஞாபகம் வந்தது.

"கொழும்பில purse phone எல்லாம் கவனம். உண்ட தங்கச்சிய மாதிரி நீயும் போன் ஐ தொலைச்சிட்டு வந்து நிக்காத.."

இவன் பாவம். நம்மட அம்மா மாதிரி ஒரு அம்மா இருந்தா purse ஐ தொலைச்சிருக்க மாட்டான். purse  இல் இருந்து நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.

"கொஞ்சம் பொறுங்க சேர், இந்த கான்டீன்ல மாத்தி ஐம்பது ரூபாய் தாறன்."

"வேணாம் .. நீங்க செலவுக்கு வச்சிக்கொள்ளுங்க"

"சேர் உங்கட பேங்க் அக்கௌன்ட் நம்பர்"

"பரவாயில்லை, ஒரு அவசரத்துக்கு தானே"

"நன்றி சார்"

அவன் கண்ணில் நன்றி உணர்ச்சி தெரிந்தது. பாவம்.
 மனதுக்குள் ஒருவனுக்கு உதவி செய்தோம் என்ற ஒரு பெருமை உணர்ச்சி இருந்தது. டிக்கெட்டை கொடுத்துவிட்டு ஸ்டேஷன்க்கு வெளியே நின்ற பஸ்சில் ஏறினேன்.

****---***---***
Interview முடிந்து விட்டது. நிச்சயமாக இந்த வேலை எனக்கு கிடைக்காது.அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வியிலேயே அது விளங்கி விட்டது. 

"cultural மினிஸ்டர் இஸ் யுவர் பிரதர்?"

"நோ சேர் "

"ஓஹ் சொறி, யு ஆர் மிஸ்டர் S.கிஷோர். ஐ தின்க் ஹி இஸ் A. கிஷோர்.."
A. கிஷோருக்குத்தான் வேலை. வாழ்க cultural மினிஸ்டர்.
அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் இரண்டு உடைகள் வாங்கிக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி புறப்படும் பஸ்சில் ஏறினேன். பஸ்ஸில் நிறைய இருக்கைகள் காலியாகவே இருந்தன. ஒரு இருபது பேர் இருந்திருப்பார்கள். என்ட தலை விதி நான் அந்த "கர்பிணிப் பெண்களுக்கு"  ஒதுக்கப்பட்ட இடத்தில போய் இருந்தேன். கொழும்பில் டிராபிக் இருமடங்காக அதிகரித்திருந்தது. பெரிய வீதிகள் நிறைய "ஒன் வே " ஆக மாற்றப்பட்டு இருந்தது. ஒரு அழகான கறுப்பு கார் கடந்து போனது. இது மாதிரி ஒண்டு வாங்க வேணும்.. அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றது. எனது பக்கத்து இருக்கையில் ஒரு நாப்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் அமர்ந்து கொண்டார். ஐந்து ஆறுநாள் ஷேவ் எடுக்காத முகம். கண்கள் சிவந்து இருந்தது. குடித்திருப்பான் போலிருக்கிறது. பஸ் அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. கொஞ்சம் தூங்கிவிட்டேன்..

MC பஹிண்ட கிட்டுவெண்ட.. கண்டெக்டர் சிங்களத்தில் சொல்வதை கேட்டு குட்டித்தூக்கம் கலைந்தது. பக்கத்தில் அழகான பெண்ணொருத்தி இருந்தாள். முகத்தை துடைத்துக்கொண்டேன்.
சிரித்தேன்..
அவள் சிரிக்கவில்லை..
நான் சிரித்திருக்க தேவையில்லை.
.
பஸ் நின்றது. ஏற்கனவே எனக்கு பக்கத்தில் இருந்த ஐயா பஸ்சில் இருந்து இறங்கி நடந்ததை யன்னல் வழியே பார்த்தேன். எனது purse இன்னும் எனது பாக்கெட் இல் இருக்கிறதா என்று .... purse இல்லை.. எனது purse இல்லை. அந்த ஐயாவை யன்னல் வழியே கூப்பிட்டுக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கினேன். கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
எனக்கு தெரிந்த அரைகுறை சிங்களத்தில் எனது purse ஐ தரும்படி கேட்டேன். அவன் ஒண்டும் தெரியாதது போல முழித்துக்கொண்டு அவனுக்கு தெரியாது என்று சொன்னான். நான் சத்தமாக கேட்டதனாலோ என்னவோ கூட்டம் கூடிவிட்டது. ஒருவன் பையை சோத்தித்து பார்க்க வேணும் என்றான். போலீசுக்கு கொண்டுபோவம் என்றான் இன்னொருவன். அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவன்

"இவன் தான் அண்டைக்கும் என்ட purse ஐ சுட்டுக்கொண்டு ஓடியவன்" என்றான்.

அது அங்கே நின்ற ஐந்தாறு விஜய்களுக்கும் அஜித்களுக்கும் போதுமாக இருந்தது. அந்த கிழவனை நையப்புடைத்து விட்டார்கள். தூரத்தில் நின்ற ட்ராபிக் போலீஸ் ஓடிவரவும் அடித்த ஐந்தாறு விஜய்களும் அஜித்களும் மாயமாக மறையவும் சரியாக இருந்தது.

அப்போதுதான் purse ஐ நான் எனது பிரயாணப் பையினுள் எடுத்து பத்திரமாக  வைத்தது ஞாபகம் வந்தது. பஸ் டிக்கெட் கூட பாக்கெட்டில் இருந்த சில்லறையில் தான் வாங்கியிருந்தேன்.

கிழவன் முகத்தில் இரத்தம் வடிய நின்றிருந்தான். போலீஸ் கேள்விகேட்க தொடங்கிவிட்டார். அனைவரினது கவனமும் கிழவன் மேல் இருந்தது. கிழவன் மட்டும் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிழவன் வைத்திருந்த பையினுள் இருந்த  இரண்டு சோற்று பார்சல்களும் எறும்புகளுக்கு இரையாகி இருந்தன. குற்ற உணர்ச்சி குறுகுறுக்கத் தொடங்கியிருந்தது. கிழவனின் பார்வை ஒரு நொடியில் ஆயிரம் கேள்விகளை கேட்டது. கைகள் நடுங்கியது. கூட்டத்தில் இருந்து நழுவி.. பஸ்சில் இருந்த பையையும் தூக்கிக்கொண்டு .. வேறு பஸ்சில் ஏறி.. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அடைந்தேன்.

***

"மட்டக்களப்புக்கு வரை பயணிக்கும் மீனகயா இரவு நேர கடுகதி புகையிரதம் இன்னும் சற்று நேரத்தில் நான்காம் மேடையை வந்தடையும்" என்று பொருள்படும் படியாக அழகாக "சிங்களத்தில்" அறிவித்தல் விடப்பட்டது..புகைவண்டியின் பெயர் சிங்களத்தில் இருந்தால் கூட பரவாயில்லை. அறிவித்தலாவது தமிழிலும் இருந்திருக்கலாம்.  இருந்திருக்கலாம்..

அங்கே இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். குற்ற உணர்ச்சியில் மனம் பதை பதைத்தது. தலைகுனிந்து நிலத்தை பார்த்தபடி இருந்தேன். கிழவனின் பார்வை மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது..

" சேர்"
எங்கேயோ கேட்டகுரல்.. நான் தலை நிமிரவில்லை..

" சேர்.. நான் ஒரு வேலை விஷயமா கொழும்புக்கு வந்தனான். என்ட purse ஐ யாரோ அடிச்சிட்டானுகள்."
அவனே தான்.. மீண்டும் பின்பக்கமாய் திரும்பி காட்டினான். அதே பாக்கெட் அதே கிழிசல்.
எனது purse ஐத்திறந்து முன்நூற்று ஐம்பது ரூபாயை எடுத்துக்கொடுத்தேன். அப்போதுதான் அவன் எனது முகத்தை பார்த்தான். அவன் என்னை இங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் காசை வாங்கவில்லை.

"ம்ம் பிடியுங்க. 805041176  S. கிஷோர், மட்டக்களப்பு கிளை, கமெர்சியல் பேங்க்" என்றேன்..