Pages

Sunday, May 15, 2011

ஒரு பயணம் ..

" கோப்பி .. உனு உனு  கோப்பி...கோப்பி... கோப்பி "

கொட்டாவி விட்டபடி எழும்பினேன்.. பக்கத்தில் இருந்த ஐயா என்னைப்பார்த்து சிரித்தார். காலை வணக்கம் சொன்னார்..

"தம்பி நல்ல நித்திரை போல.."

நானும் நீண்ட நேரம் அசந்து தூங்கிவிட்டதை எண்ணி அசடு வழிந்தேன்.. சட்டையை சரி செய்து கொண்டேன். மணிக்கம்பி 7 ஐத் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது.

"எந்த ஸ்டேஷன் ஐயா?"

"கம்பஹா.. இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். எங்கட ஊரில எப்ப நேரத்துக்கு ட்ரெயின் போய்ச் சேந்திருக்கு.. நான் லண்டனில இருக்கேக்குள்ள டைம் எண்டா டைம் தான் ..."

அவருடைய கதையில் மேற்கொண்டு கவனம் செலுத்த முடியவில்லை; வானம் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. வெளிக்கிடும் போது அம்மா குடையை எடுத்துக்கொண்டு போகச்சொன்னது ஞாபகம் வந்தது.

"நாங்கெல்லாம் அம்மா சொன்னத எப்ப கேட்டிருக்கம்".

எதிரே இருந்த அஞ்சு வயசு வாண்டு யன்னலுக்கு வெளியே தலையைப் போடுவதிலேயே குறியாக இருந்தான். அவனுடைய அம்மா அவனுடைய இடுப்பிலே கை வைத்து உள்ளே இழுப்பதிலேயே குறியாக இருந்தாள். மனம் இன்றைய பயணத்தின் காரணம் பக்கம் போனது. இன்று தான் முதலாவது interview . நாலு வருஷம் campus ல படிச்சு நாப்பது எக்ஸாம் எழுதி இருப்பன். பின்னேரம் 2 மணிக்கு.. இன்னும் நேரம் கிடக்கு.

***


ஐயா அவருடைய பிரயாணப்பையை மேலே இருந்து எடுக்க கஷ்டப் பட்டார். நான் அவரது பையை எடுத்துக் கொடுத்தேன். இறங்க  முற்பட்ட வேளையில் ஒரு பொடியன் ஐயாவை இடித்து தள்ளிக்கொண்டு இறங்கிப்போனான். அவர்  தடுமாறி கீழே விழுந்துவிட்டார். தூக்கிவிட்டேன். ஐயா சிரித்துக்கொண்டே

"பாவம்! வயிறு சரியில்லை எண்டு நினைக்கிறன்!" என்றார்.

"எங்கட தமிழ்ச்சனம் தான் மோசம் தம்பி.. ஹ்ம்ம்.. என்ன செய்ய? எல்லாத்துக்கும் க்யு வில நிண்டு நிண்டு முண்டுப்பட்டு முட்டுப்பட்டு பழகிட்டுது. சங்கக் கடை.. கிளியரன்ஸ்.. பாஸ்.. கப்பல் டிக்கெட்... செக் பொயின்ட்"

ஐயா பகிடியாக சொன்னாலும் அதில் நிறைய கருத்து நிரம்பியிருந்தது..

"தம்பி கொழும்பில எந்த இடம்? நான் கொட்டாஞ்சேனை போகவேணும்

""நான் வெள்ளவத்தை ஐயா. நான் வாறன்"

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் சிற்சில மாற்றங்களுடன் நவீன மயப்படுத்தப் பட்டிருந்தது. பெரிய TV monitor கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தன. எனது பிரயாணப்பையை தூக்கிக்கொண்டு இறங்கினேன்.






அப்பப்பா.. ஜன சமுத்திரம் மெதுவாக வாயில் கதவை நோக்கி  நகர்ந்து கொண்டிருந்தது . என்னதான் மேம்பாலம் கட்டி வைத்திருந்தாலும் கீழே குதித்து தண்டவாளத்தை தாண்டி போகும் பழக்கம் இன்னும் நிறைய பேருக்கு இருந்தது. எனது டிக்கெட்டை கையில் எடுத்துக்கொண்டேன்.

அப்போது தான் "அவன்" என்னை நோக்கி வந்தான். பெரிய ஆபீசர் போலே உடையணிந்திருந்தான். அவனுடைய சப்பாத்து மினுமினுக்கும்படி போலிஷ் செய்யப்பட்டிருந்தது. அவனுடைய முகத்தில் பதட்டம் தென்பட்டது. அவன் முகத்தில் வியர்வை துளிர்த்திருந்தது.

" சேர்.. நான் ஒரு வேலை விஷயமா கொழும்புக்கு வந்தனான். என்ட purse ஐ யாரோ அடிச்சிட்டானுகள்."

அவன் பின் பக்கமாய் திரும்பி காட்டினான். அவனுடைய பின் பாக்கெட் அரைவாசி கிழிந்திருந்தது.

"எனக்கு இங்க யாரையுமே தெரியாது சேர்.  எனக்கு ஊருக்கு போக மட்டும் ஒரு 350 ரூபா காசு கொடுத்தீங்க எண்டா, நான் ஊருக்கு போய் உங்கட காச திருப்பி அனுப்பிவிடுறன் சேர்."

அவனுடைய முகத்தில் இம்மியளவும் பொய் சொல்கிறான் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அவன் எனது முகத்தை பார்க்க முடியாமல் குனிந்து கொண்டு நின்றான். 25 வயது இருக்கும். படித்தவன் போலிருந்தான். அம்மா சொன்னது மீண்டும் ஞாபகம் வந்தது.

"கொழும்பில purse phone எல்லாம் கவனம். உண்ட தங்கச்சிய மாதிரி நீயும் போன் ஐ தொலைச்சிட்டு வந்து நிக்காத.."

இவன் பாவம். நம்மட அம்மா மாதிரி ஒரு அம்மா இருந்தா purse ஐ தொலைச்சிருக்க மாட்டான். purse  இல் இருந்து நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.

"கொஞ்சம் பொறுங்க சேர், இந்த கான்டீன்ல மாத்தி ஐம்பது ரூபாய் தாறன்."

"வேணாம் .. நீங்க செலவுக்கு வச்சிக்கொள்ளுங்க"

"சேர் உங்கட பேங்க் அக்கௌன்ட் நம்பர்"

"பரவாயில்லை, ஒரு அவசரத்துக்கு தானே"

"நன்றி சார்"

அவன் கண்ணில் நன்றி உணர்ச்சி தெரிந்தது. பாவம்.
 மனதுக்குள் ஒருவனுக்கு உதவி செய்தோம் என்ற ஒரு பெருமை உணர்ச்சி இருந்தது. டிக்கெட்டை கொடுத்துவிட்டு ஸ்டேஷன்க்கு வெளியே நின்ற பஸ்சில் ஏறினேன்.

****---***---***
Interview முடிந்து விட்டது. நிச்சயமாக இந்த வேலை எனக்கு கிடைக்காது.அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வியிலேயே அது விளங்கி விட்டது. 

"cultural மினிஸ்டர் இஸ் யுவர் பிரதர்?"

"நோ சேர் "

"ஓஹ் சொறி, யு ஆர் மிஸ்டர் S.கிஷோர். ஐ தின்க் ஹி இஸ் A. கிஷோர்.."
A. கிஷோருக்குத்தான் வேலை. வாழ்க cultural மினிஸ்டர்.
அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் இரண்டு உடைகள் வாங்கிக்கொண்டு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி புறப்படும் பஸ்சில் ஏறினேன். பஸ்ஸில் நிறைய இருக்கைகள் காலியாகவே இருந்தன. ஒரு இருபது பேர் இருந்திருப்பார்கள். என்ட தலை விதி நான் அந்த "கர்பிணிப் பெண்களுக்கு"  ஒதுக்கப்பட்ட இடத்தில போய் இருந்தேன். கொழும்பில் டிராபிக் இருமடங்காக அதிகரித்திருந்தது. பெரிய வீதிகள் நிறைய "ஒன் வே " ஆக மாற்றப்பட்டு இருந்தது. ஒரு அழகான கறுப்பு கார் கடந்து போனது. இது மாதிரி ஒண்டு வாங்க வேணும்.. அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்றது. எனது பக்கத்து இருக்கையில் ஒரு நாப்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் அமர்ந்து கொண்டார். ஐந்து ஆறுநாள் ஷேவ் எடுக்காத முகம். கண்கள் சிவந்து இருந்தது. குடித்திருப்பான் போலிருக்கிறது. பஸ் அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. கொஞ்சம் தூங்கிவிட்டேன்..

MC பஹிண்ட கிட்டுவெண்ட.. கண்டெக்டர் சிங்களத்தில் சொல்வதை கேட்டு குட்டித்தூக்கம் கலைந்தது. பக்கத்தில் அழகான பெண்ணொருத்தி இருந்தாள். முகத்தை துடைத்துக்கொண்டேன்.
சிரித்தேன்..
அவள் சிரிக்கவில்லை..
நான் சிரித்திருக்க தேவையில்லை.
.
பஸ் நின்றது. ஏற்கனவே எனக்கு பக்கத்தில் இருந்த ஐயா பஸ்சில் இருந்து இறங்கி நடந்ததை யன்னல் வழியே பார்த்தேன். எனது purse இன்னும் எனது பாக்கெட் இல் இருக்கிறதா என்று .... purse இல்லை.. எனது purse இல்லை. அந்த ஐயாவை யன்னல் வழியே கூப்பிட்டுக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கினேன். கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
எனக்கு தெரிந்த அரைகுறை சிங்களத்தில் எனது purse ஐ தரும்படி கேட்டேன். அவன் ஒண்டும் தெரியாதது போல முழித்துக்கொண்டு அவனுக்கு தெரியாது என்று சொன்னான். நான் சத்தமாக கேட்டதனாலோ என்னவோ கூட்டம் கூடிவிட்டது. ஒருவன் பையை சோத்தித்து பார்க்க வேணும் என்றான். போலீசுக்கு கொண்டுபோவம் என்றான் இன்னொருவன். அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒருவன்

"இவன் தான் அண்டைக்கும் என்ட purse ஐ சுட்டுக்கொண்டு ஓடியவன்" என்றான்.

அது அங்கே நின்ற ஐந்தாறு விஜய்களுக்கும் அஜித்களுக்கும் போதுமாக இருந்தது. அந்த கிழவனை நையப்புடைத்து விட்டார்கள். தூரத்தில் நின்ற ட்ராபிக் போலீஸ் ஓடிவரவும் அடித்த ஐந்தாறு விஜய்களும் அஜித்களும் மாயமாக மறையவும் சரியாக இருந்தது.

அப்போதுதான் purse ஐ நான் எனது பிரயாணப் பையினுள் எடுத்து பத்திரமாக  வைத்தது ஞாபகம் வந்தது. பஸ் டிக்கெட் கூட பாக்கெட்டில் இருந்த சில்லறையில் தான் வாங்கியிருந்தேன்.

கிழவன் முகத்தில் இரத்தம் வடிய நின்றிருந்தான். போலீஸ் கேள்விகேட்க தொடங்கிவிட்டார். அனைவரினது கவனமும் கிழவன் மேல் இருந்தது. கிழவன் மட்டும் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிழவன் வைத்திருந்த பையினுள் இருந்த  இரண்டு சோற்று பார்சல்களும் எறும்புகளுக்கு இரையாகி இருந்தன. குற்ற உணர்ச்சி குறுகுறுக்கத் தொடங்கியிருந்தது. கிழவனின் பார்வை ஒரு நொடியில் ஆயிரம் கேள்விகளை கேட்டது. கைகள் நடுங்கியது. கூட்டத்தில் இருந்து நழுவி.. பஸ்சில் இருந்த பையையும் தூக்கிக்கொண்டு .. வேறு பஸ்சில் ஏறி.. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அடைந்தேன்.

***

"மட்டக்களப்புக்கு வரை பயணிக்கும் மீனகயா இரவு நேர கடுகதி புகையிரதம் இன்னும் சற்று நேரத்தில் நான்காம் மேடையை வந்தடையும்" என்று பொருள்படும் படியாக அழகாக "சிங்களத்தில்" அறிவித்தல் விடப்பட்டது..புகைவண்டியின் பெயர் சிங்களத்தில் இருந்தால் கூட பரவாயில்லை. அறிவித்தலாவது தமிழிலும் இருந்திருக்கலாம்.  இருந்திருக்கலாம்..

அங்கே இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். குற்ற உணர்ச்சியில் மனம் பதை பதைத்தது. தலைகுனிந்து நிலத்தை பார்த்தபடி இருந்தேன். கிழவனின் பார்வை மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது..

" சேர்"
எங்கேயோ கேட்டகுரல்.. நான் தலை நிமிரவில்லை..

" சேர்.. நான் ஒரு வேலை விஷயமா கொழும்புக்கு வந்தனான். என்ட purse ஐ யாரோ அடிச்சிட்டானுகள்."
அவனே தான்.. மீண்டும் பின்பக்கமாய் திரும்பி காட்டினான். அதே பாக்கெட் அதே கிழிசல்.
எனது purse ஐத்திறந்து முன்நூற்று ஐம்பது ரூபாயை எடுத்துக்கொடுத்தேன். அப்போதுதான் அவன் எனது முகத்தை பார்த்தான். அவன் என்னை இங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் காசை வாங்கவில்லை.

"ம்ம் பிடியுங்க. 805041176  S. கிஷோர், மட்டக்களப்பு கிளை, கமெர்சியல் பேங்க்" என்றேன்..



2 comments:

  1. எனக்கும் இந்த அனுபவம் இருக்கு. ஆனால் முதலே கேள்விபட்டதாலே உசாராகி விட்டேன்.

    ReplyDelete
  2. ஹா ஹா நானும் ஒரு கதை எழுதியிருந்தேன்.

    விளம்பர இடைவேளை; (இசை ......)

    http://www.ssakthivel.com/2011/05/blog-post_21.html

    ReplyDelete