Pages

Monday, May 23, 2011

அழுக்கு

"பள்ளிக்கு போவதில்லையா? "

"இல்ல அண்ணா!"

"ஏண்டா? வீட்டுல கஷ்டமா?"

"ம்ம்ம்.. அப்பா வீட்டுக்கு பெரிசா காசு குடுக்கிறதில்ல.. நல்லா குடிப்பார்..."

"அம்மாக்கு அடிப்பாரா?"

"இல்ல இல்ல.. அம்மாதான் அடிப்பா. அவர் வெறியில மயங்கின பிறகு!!"

"அண்ணா அக்கா இருக்கா?"

"அக்கா மட்டும்.. ஆனா இப்ப இல்ல.."

"எங்கடா?"

"இயக்கத்துக்கு போனவ.. பிறகு காணல்ல."

"ஹ்ம்ம்.. வீடு எங்கடா தம்பி? "

"மாங்குளம் "

"பஸ்சிலையா இங்க வந்து போவாய்?"

"சைக்கிள்"

"என்ன சயிக்கிலா ?"

"ம்ம்.. அந்தா நிக்குது.. "
 
முறிகண்டிப் பிள்ளையார் கோயிலில் இருந்து மாங்குளத்துக்கு இருந்த இருபது கிலோமீட்டர் தூரத்தை எதோ இருபது மீட்டர் கணக்கில் அசால்ட்டாக சொல்லிக்கொண்டே இரண்டு டயரை ஒரு இரும்புத்துண்டில் பொருத்தியபடி சயிக்கிள் மாதிரி இருந்த ஒரு வாகனத்தை காட்டினான்.. அது கீழே படுத்து இளைப்பாறிக்கொண்டிருந்தது. ஸ்டாண்டு கூட இல்லை.




"எத்தின மணிக்கு வீட்ட போவாய்?"

"மூண்டு மணிக்கு.."

"அடேய் இப்பவே நாலு மணியாகிட்டுதே டா!!!"

"இது இண்டைக்கு.. நான் சொன்னது நாளைக்கு.. "

வடிவேல் மாதிரியே சொல்லிவிட்டு அவனுடைய சூத்தை பல் தெரியும்படி சிரித்தான்.

"அப்ப இரவைக்கு.. எங்கடா படுப்பாய்?"

"கோயில் வாசல்ல."


முறிகண்டி பிள்ளயாரிண்ட துணையுடன் படுத்துறங்கும் தைரியம் அவன் குரலில் தெரிந்தது.

"சரி சரி.. சாப்பிட்டியா?"

"ம்ம்ம் வடை சாப்பிட்டன்!"

"நேற்றா இண்டைக்கா?"

"இப்பதான்.. அது சரி ஏன் என்னப்போட்டு இப்படி கேள்வி கேட்கிறீங்க? பொலிசில கிளிசில புடிச்சி குடுக்க போறீங்களோ?"
 
சிறுசு விவரங்கள் தெரிந்து வைத்திருக்கிறது.

"ஏண்டா.. நீ களவு கிளவு எடுக்கல்லியே?"

"பள்ளிக்கு போகாட்டி போலிஸ் பிடிக்கும் எண்டு ஒரு மாமா சொன்னவர். சரி சரி நான் கச்சான்கொட்டை விக்க போக வேணும். என்ட காசத்தாங்க"

கச்சான் வாங்கினால்தான் கதைப்பேன் என்று அவன் என்னுடன் கதைக்க தொடங்கமுன்பே வரையறை விதித்திருந்தான். பாக்கேட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்துக்குடுத்தேன். நாலு பக்கெட் கச்சான் எண்ணித்தந்தான்.

"வேண்டாமடா.. நீயே வச்சுக்கொள் "

"இல்ல இல்ல நீங்க வாங்கிக்கொள்ளுங்க.. வித்து முடிச்சாத்தான் நான் வீட்ட போகலாம்"

அவன் சொல்வதற்கும் முறிகண்டி விநாயகரிடம் அருள் பெறப்போன எனது மனைவியும் 5 வயது வாண்டும் வெளியே வர சரியாய் இருந்தது. என்னிடம் ஓடி வந்த வாண்டு

" டாட் ஐ வான்ட் தட் பீ நட்ஸ்

கச்சான் பக்கெட்டை காட்டியபடி சிணுங்கினான்

சுசந்திக்கா வேகத்தில் ஓடிவந்த மனைவி. குழந்தையை தூக்கிக்கொண்டு

"நோ  நோ இட்ஸ் டர்ட்டி (Dirty)"

என்று சொல்லிவிட்டு வந்தவேகத்தில் வெயில் தாங்காமல் ஓடிச்சென்று காருக்குள் ஏறிவிட்டாள். அமரிக்காவில் பிறந்தவளில்லை. நம்மட திருகோணமலைதான்..

" சார்.."

காரைப்பார்துக்கொண்டு இருந்ததில் அவன் கூப்பிட்ட பக்கம் பார்க்கவில்லை.

"சார் "

"என்னடா? "

"நோ எண்டா இல்லைதானே ?"

"ம்ம்ம் "

"டர்ட்டி எண்டா  என்ன சார்?"

அவனை நோகடிக்காமல் இருக்கக்கூடிய சொற்களை மூளையில் சர்ச் செய்தேன்.

"டர்ட்டி .. எண்டால் ... நல்ல ருசியாக இருக்கும் எண்டு அர்த்தம்"

" அப்பிடியெண்டா இல்ல இல்ல  நல்ல ருசியாக இருக்கும் எண்டு அக்கா சொல்லிட்டு போகுது!!! ம்ம்ம்.. அதுசரி பையன் என்ன கேட்டான்? "

 நிச்சயமாக இந்த கேள்வியை நான் எதிர் பார்க்காவில்லை!

"ம்ம்ம் .. கச்சான் கசக்குமா எண்டு கேட்டான்.."

"அது சரி கச்சானுக்கு இங்கிலீசுல என்ன? "

இப்போது கேள்வி கேட்பது அவன் முறை. பிய்த்து உதறுகிறானே!!

"பீ நட்ஸ்"

முதன்முறையாக ஒரு உண்மை சொன்னேன்.

 கவலையாக இருந்தது. ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து அவனுடைய ஷர்ட் பாக்கெட்டில் திணித்தேன். அது  ஓட்டை வழியாக கீழே விழுந்தது. அவன் அதை  எடுத்து மடித்து மற்ற பாக்கெட்டுக்குள் வைத்தான்.

"இங்கால ஓட்டையில்ல!"

"உன்ட அம்மாவுக்கு நான் காசு குடுக்கோணும். இத குடுத்து விடு."

"சரி சார். இங்கால வந்தா இனி என்னட்டயே பீ நட்ஸ் வாங்குங்கோ "

ஏழு வயதில் எவ்வளவு முதிர்ச்சி. நம்மட மகன மூத்திரம் பேயக்கூட தனிய விடமாட்டமே? மனைவி அழைக்கவும் அவனிடம் பார்வையிலேயே விடை பெற்றுக்கொண்டு அவன் கொடுத்த நான்கு கச்சான் பாக்கேட்களுடனும்  காரில் ஏறினேன். ஜம்போ பீ நட்ஸ் மகனின் வாய்க்குள் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது. காரை ஸ்டார்ட் செய்தேன். அப்போது ஒரு UNICEF வாகனம் கோயிலுக்கு வந்து நின்றது. ஒரு வெள்ளைக்காரனும் வெள்ளைக்காரியும் உள்ளேயிருந்து இறங்கினார்கள். கச்சான் பையன் அவர்கள் அருகே ஓடிச்சென்றான்.

"சார் டர்ட்டி பீ நட்ஸ் .. நல்ல டர்ட்டி பீ நட்ஸ்..  வேணுமா ?"



11 comments:

  1. உங்கள் ப்லாக் பெயர் நல்லா இருக்குது.... ஹையா.... நான்தான் முதல் Follower !!!!
    Best wishes! :-))))

    ReplyDelete
  2. @ Chitra முதல் Followerக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மீண்டும் மீண்டும் வந்து எங்களைப்போன்ற புதுமுகங்களுக்கு ஊக்கமளிப்பீர்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் எனது நன்றிகள்

    ReplyDelete
  3. யோகா.சு.May 30, 2011 at 10:24 AM

    அமரிக்காவில் பிறந்தவளில்லை. நம்மட திருகோணமலைதான்....................!!!!!!!!

    ReplyDelete
  4. யோகா.சு.May 30, 2011 at 10:25 AM

    எதுவும் எழுதத் தோன்றவில்லை.கண்கள் பனிக்கின்றன

    ReplyDelete
  5. valikal nirantha kathai,,,
    valththukkal,


    can you come my said?

    ReplyDelete
  6. நன்றி @ விடிவெள்ளி ... கண்டிப்பாக வருகிறேன்..

    ReplyDelete
  7. அருமையான கதை அருமையான நடை... இது போல நிறைய மனிதர்கள் அந்த பிரதேசத்திலிருப்பதாக அறிகிறேன்.
    தங்களுக்கு எனது வாழ்த்துக்ள்.
    தொடர்ந்து இது போல தரமான ஆக்கங்களை பயுங்கள்.

    ReplyDelete
  8. நல்ல கதை, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல கதை; ஆனால் "சார்" என்பது உதைக்குதே? "சேர்" என்றுதானே ஊரில் சொல்லுவோம்?

    ReplyDelete